இலங்கையில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சீன நிறுவனம் ஒன்றில் நான் பணத்தை பெற்றுக்கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட பொய்யான விடயங்கள் அடங்கிய செய்திகளை வெளியிட்டு அவமதிப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளேன்.
இது சம்பந்தமாக ஊடக நிறுவனங்களுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்ப தயாராகி வருவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் நிறுவனம் ஒன்று மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார செலவுகளுக்காக 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமை சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முக்கியமான தகவல்களுடன் விரிவான ஆய்வுகட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியை இலங்கையில் வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.