இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்தல விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“மத்தல விமான நிலையத்திற்கு பறவைகளே வந்து செல்கின்றன. இந்நிலையில், மத்தல விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவைகளை இயக்குவது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் சர்வதேச சேவைகள் ஆரம்பிக்கப்படும் என” பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல சர்வதேச விமான நிலையத்துக்கு சேவையை நடத்தி வந்த, ஒரே ஒரு விமான சேவையான பிளை டுபாய் நிறுவனமும், அண்மையில் தனது சேவையை நிறுத்தியது.
இந்நிலையில், மத்தல விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் விமான சேவைகள் எதுவும் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.