இது சட்டத்திற்குப் புறம்பானது? வடக்கு முதல்வரின் நிலைப்பாடு இதுவே

Report Print Sujitha Sri in அரசியல்

மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமித்தல் மற்றும் பதவி இறக்குவதை தீர்மானித்தல் அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே எமது நிலைப்பாடு என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மேன்முறையிட்டு நீதிமன்றம், எந்த ஒரு மாகாண முதலமைச்சரும், தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக்கூறி, டெனீஸ்வரனின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ டெனீஸ்வரன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள்.

ஆனால் இந்த தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. டெனீஸ்வரனை சேர்த்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்துக்குக் கூட அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் யாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும்.

ஆறு பேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும்.

சட்டவலுவற்றதாக அமையும். அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மால் இயைந்து அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவே தான் நாங்கள் இதுபற்றிய உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இவ் வழக்கில் மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கூடியவர்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்களே. உண்மையில் அவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் அரசியல் யாப்பின் 125ஆம் இலக்க ஏற்பாட்டால் வழங்கப்பட்டுள்ளது.

எமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே என குறிப்பிட்டுள்ளார்.