வடக்கு முதல்வரின் அமைச்சுப் பணியாளர்கள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த அம்பலம்

Report Print Rakesh in அரசியல்

சுற்றுலாத்துறை ஆய்வுக்காக வடக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையினருக்கு கண்டி மாவட்டத்துக்குச் செல்வதற்கு கிடைத்த வாய்ப்பில், முதலமைச்சரின் அமைச்சுப் பணியாளர்கள் 40 பேர் சுற்றுலா சென்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாணத்துக்கான சுற்றுலா அதிகார சபை அண்மையில் உருவாக்கப்பட்டது.

வடக்கு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக ஏனைய மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளைச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

கண்டி மாவட்டத்துக்கு சுற்றுலா அதிகார சபையினர் பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சுப் பணியாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

சுற்றுலா அதிகார சபையின் 11 பேருடன், முதலமைச்சர் அமைச்சுப் பணியாளர்களுமாக மொத்தம் 40 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்ற இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்துள்ளனர். இந்தப் பயணத்துக்கான செலவு, மாகாண நிதி ஒதுக்கீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் தேவராஜா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

“மத்திய மாகாணத்தின் அழைப்புக்கு அமைவாக இந்தப் பயணம் இடம்பெற்றது. மாகாணச் சுற்றுலாத்துறையை எவ்வாறு இலாபமீட்டும் துறையாக மாற்றியமைப்பது என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இந்தப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது என்று கூறினார்.

முதலமைச்சரின் அமைச்சுப் பணியாளர்கள் உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பிலும், இந்தப் பயணம் தொடர்பிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மின்னஞ்சல் ஊடாக வினவியபோது அவர் பதிலளிக்கவில்லை.

இது தொடர்பில் அறிய முதலமைச்சரின் அமைச்சுச் செயலருக்கு அழைப்பு எடுத்தபோது அவரும் பதிலளிக்கவில்லை.