விஜயகலாவிற்கு காத்திருக்கும் ஆபத்து! நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க திட்டம்?

Report Print Murali Murali in அரசியல்

விஜயகலா மகேஸ்வரனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்து அண்மையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விஜயகலா மகேஸ்வரனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க இரு பிரதான கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் பேசிய விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் மீள்வருகை குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஆளும், மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

இதன் காரணமாக தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சர் பதவியையும் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் விஜயகலா மகேஸ்வரனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படக் கூடும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த, நவீன் திசநாயக்கவும், விஜயகலா மகேஸ்வரன் பதவியை இழக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், விஜயகலா மகேஸ்வரனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.