வடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழர் வரலாற்றை அழிக்கின்றது

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு தொல்லியல் திணைக்களம் தமிழர் வரலாற்றை அழித்து பௌத்த மத திணிப்பை செய்து கொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம் வடமாகாணத்தில் சுமார் 82 இடங்களை தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தி அந்த இடங்களில் உள்ள தமிழ் மக்களின் தொல்லியல் சான்றுகளை அழித்து பௌத்த மத திணிப்பை செய்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் 126ஆவது அமர்வில் பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் குறித்த பிரரேரணையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருததுத் தெரிவிக்கையில்,

செம்மலை மக்களுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக ஏற்கனவே நீராவியடி ஏற்றத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது இப்பகுதிகளில் மக்கள் தமது சிறுபயிர்ச் செய்கைகள் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இங்கு பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்தது. 2009 இற்கு பின் இதற்கு எதிர்ப்பக்கமாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இது தவிர பிள்ளையாரைச் சூழ சிறியளவிலான விகாரை, புத்தர் சிலை என்பன காணப்பட்டன. தற்போது மிகவும் பெரியளவிலான குருகந்தராஜ மகா விகாரை என்ற விகாரை அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது.

கடந்த 2018.07.03ம் திகதி நில அளவைத் திணைக்களத்துடன் இணைந்து அளவீடு செய்து அபகரிக்கும் பாரியளவிலான எண்ணத்துடனான இவர்களின் முயற்சியை மக்களும் மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து தற்காலிகமாக தடுத்து நிறுத்தினோம்.

போர் முடிவுற்ற காலப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் சட்டத்தின் மூலமான இச்செயல்களுக்கு உறுதுணையாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய 1823/73ம் இலக்க 2013.08.16ம் திகதி 188ம் அத்தியாயமான தொல்லியல் கட்டளைச்சட்டம் 16ம் பிரிவின் கீழ் புராதனச் சின்னங்கள் அதி விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் குறிப்பாக முல்லைத்தீவு பிரதான பொதுச்சந்தை (து. லூயில் மனுவேல் ஒவ் வன்னி, புத்தகத்தில் 1886ல் கட்டப்பட்ட ஒரு நல்ல சந்தைக்கட்டடம் என்று குறிப்பிட்டுள்ளார்), ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம், மாந்தைகிழக்கு பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில்,

கரைதுறைப்பற்று பிரதேச குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில் வளாகம், கரைதுறைப்பற்று பிரதேச குமுழமுனை கிராம அலுவலர் பிரிவில் ஆஞ்சநேயர் கோவிலை அண்மித்த இடங்கள் உள்ளிட்ட 8 இடங்களையும் இதேபோல் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுமார் 82 இடங்களை தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

புராதனச்சின்னங்கள் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவை தான் ஆனால் இங்கு அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கில் மட்டும் தொல்பொருள் திணைக்களம் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் மூலமாக புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுதல் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் தொன்மைகள் தொன்மைச்சான்றுகள் அழிக்கப்படுகின்றன.

ஒரு இனத்தினுடைய பழைமை வாய்ந்த இச்சான்றுகளை அழித்து பௌத்த ஆதிக்கங்களை தமிழர்கள் தொன்று தொட்டு வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நுழைக்கின்றார்கள். திணிக்கின்றார்கள். இதன் மூலம் ஒரு கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்கு முறை, இன அழிப்பினை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.