பொலிஸ்மா அதிபருடன் யாழ்ப்பாணத்துக்கு செல்கின்றார் சட்டம், ஒழுங்கு அமைச்சர்

Report Print Rakesh in அரசியல்

யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் சிறுவர் மீதான துன்புறுத்தல் எனக் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகக் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. அதனால் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸாரும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். எனினும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அனைவராலும் முன்வைக்கப்படுகின்றது.

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்யாமல் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைதுசெய்து வழக்குகளைச் சோடிப்புச் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் நீதிமன்றங்களில் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில், பொஸுக்குப் பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

காங்கேசன்துறையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குப் பொலிஸ் திணைக்களத்தால் அமைத்து வழங்கப்படும் வீட்டை இருவரும் இணைந்து கையளிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.