ஹஜ் யாத்திரை ஏற்பாட்டில் மோசடி! ஹலீமின் அமைச்சு தொடர்பில் விசாரணை

Report Print Aasim in அரசியல்

புனித ஹஜ் யாத்திரைக்காக வருடாந்தம் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனித மக்காவில் ஏற்படும் இடநெருக்கடி காரணமாக வருடாந்த ஹஜ் யாத்திரைக்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழஙகப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஏற்ப வருடாந்தம் 2400 பேர் மட்டும் இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வதற்காக அனுமதி வழங்கப்படுகின்றது.

இதன்காரணமாக தற்போதைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக தங்களைப் பதிவு செய்து கொண்டு காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

எனினும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சு ஏ.எச். எம். ஹலீமின் வசம் வந்த பின்னர் அவரது சகோதரர் பாஹிம் ஹஜ் விவகாரங்களை முறைகேடாக கையாளுவதாக ஹஜ் யாத்திரை முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதன் படி காத்திருப்பு பட்டியலுக்கு வௌியில் உள்ளோரை அவர் தனது செல்வாக்கின் மூலம் அழைத்துச் செல்வதாகவும் ஹஜ் யாத்திரை முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

ஹஜ் யாத்திரிகர்களிடம் இருந்து முன்பணமாக அறவிடப்பட்ட பணத்தில் 86.4 மில்லியன் ரூபா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் முகவர்களின் சங்கம் புள்ளிவிபரங்களுடன் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தது.

இதற்கு எதிராக ஹஜ் யாத்திரை முகவர்கள் சங்கம் அண்மையில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தது. அத்துடன் ஜனாதிபதி புலனாய்வு விசாரணைப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.

தற்போது ஹஜ் யாத்திரை ஏற்பாடு விடயங்களில் பாரிய முறைகேடுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாளை மறுதினம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் மலிக் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.