பொய் கூறி தமிழர் வாழ்விடங்களை அபகரிக்கும் தொல்லியல் திணைக்களம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் தொல்லியல் திணைக்களம் அபாண்டமான பொய்களை கூறி சுவீகரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் இருந்த கோட்டைக்குள் புலிக்கொடி என்றைக்கு பறக்கிறதோ அன்றைக்கே தமிழர்களுக்கு விடுதலை என தியாகி திலீபன் கூறியிருந்தார்.

அவ்வாறான யாழ்.கோட்டை யை இராணுவத்திற்கு மீண்டும் தாரைவார்ப்பதற்கு இடமளிக்ககூடாது. மேலும் கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை கூறும் வரலாற்று சான்றுகள் இருப்பதாக வரலாற்றுத்துறை போராசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அவ்வாறான வரலாற்று சான்றுகளை எக்காலத்திலும் மீட்க கூடாது என்பதற்காகவே யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு தாரை வார்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் பல ஆயிரம் ஏக்கரை தமது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வருவதற்காக அப்பட்டமான பொய்களை கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறே யாழ்.கோட்டையையும் இராணுவத்திற்கு தாரைவார்க்க தொல்லியல் திணைக்களம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

இதனை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்ககூடாது. ஒன்று திரண்டு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதன் ஊடாகவே யாழ்.கோட்டையை பாதுகாக்க முடியும். அதனை மக்கள் செய்யவேண்டும். மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்றார்.

Latest Offers