போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாட்டில் தற்போது கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் பிள்ளைகளையும், பொது மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
எனவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற தான் கையெழுத்திடவுள்ளேன்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 42 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது.
அண்மை காலமாக இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது என்பது அதிகரித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.