ஆட்கடத்தலுக்கு பயன்படுத்திய வான் பற்றிய தகவல்களை மறைக்கும் கடற்படை

Report Print Steephen Steephen in அரசியல்

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் போக செய்த சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கடற்படையின் வான், பின்னர் முற்றாக திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் கடற்படையினர் அது பற்றிய தகவல்களை வழங்காமல் தவிர்த்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்துள்ளனர்.

கடற்படையின் வான் பற்றி மட்டுமல்லாது சந்தேக நபர்களான கடற்படையினர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல்களையும் வழங்காது கடற்படையினர் தவிர்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையான காலத்தில் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் 11 பேர் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

கஸ்தூரி ஆராச்சிகே ஜோ ரீட், ராஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹமட் சாஜித், ஜமால்டீன் திலான், அமனன் லியோன், ரொஷான் லியோன், அன்டனி கஸ்தூரிஆராச்சி, தியாகராஜா ஜெகன், மொஹமட் அலி அன்வர் ஆகியோர் சம்பவங்களில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, விசாரணைகள் தொடர்பான மேலதிக அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கடற்படையினரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...