புலிகளின் காலத்தில் குற்றச் செயல்கள் நடக்கவில்லையா?

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் குற்றச் செயல்களே நடக்கவில்லை என சிலர் கூறுவது அவர்களது அறியாமையே ஆகும் என சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்.வந்த சட்டம் ஒழுங்குக்கான அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறும்போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வடக்கில் பெருமளவிலான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதே நேரம் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும் குற்றச்செயல்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறு குற்றச்செயல்கள் நடைபெறவில்லை என்று பலரும் கூறியும் வருகின்றனர்.

புலிகளின் காலத்தில் வாள்வெட்டுக்கள், கொள்ளைகள், துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை எனக் கூறிக் கொண்டு போவது பிழையான விடயம். அவ்வாறு புலிகள் இருந்த காலத்தில் இது போன்ற குற்றச்செயல்கள் நடக்கவில்லை என்று சொல்வதை அறியாமையினால் சொல்வதாகவே நான் பார்க்கின்றேன்.

இங்கு குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுத் தான் வருகின்றன.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. அதே போன்று தொடர்ந்தும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவும் உள்ளது.

இதே வேளை வடக்கு மாகாணத்தில் பொலிஸார் இருக்கையில் இராணுவம் தேவையில்லை என்று கூறப்படுகிறது குறித்து பிரதி அமைச்சரிடம் ஊடகவியியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது இராணுவத்தினர் வடக்கில் தேவை என்றும் அவர்களின் சேவை வடக்கில் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...