மைத்திரி அதை செய்யவேமாட்டார்! சி.பி.ரத்நாயக்க

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றமாட்டார் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தபோது, நியுயோர்க் டைம்ஸ் விவகாரத்தைக் கொண்டுவந்து மஹிந்த மீது குற்றம் சுமத்தி, நாட்டு மக்களை இந்த அரசாங்கம் திசைத்திருப்பியது.

இதனையடுத்து, மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, விஜயகலா மகேஸ்வரின் கருத்தைக் கொண்டு, அந்த விவகாரத்தை மூடிமறைத்தது.

தற்போது, 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காகவும் இந்த விடயத்திலிருந்து அனைவரையும் திசைத்திருப்புவதற்காகவுமே மரண தண்டனை எனும் விவகாரத்தை இந்த அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. இவை மிகவும் மோசமான செயற்பாடுகளாகும்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் தூக்குதண்டனை விதிப்பது தொடர்பிலான சட்டமூலத்தைக் கொண்டுவந்திருந்தோம். அதற்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ மட்டும் தான் கைச்சாத்திட வேண்டியிருந்தது. எனினும், பொலிஸ் துறையின் மீதான சந்தேகத்தினால் நாம் அதனை அப்போது நிறைவேற்றவில்லை.

ஏனெனில், தற்போது நாட்டில் பாதாளக்குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொலிஸ் ஊடகப்பேச்சாளரோ பாதாளக்குழுக்களின் ஊடகப்பேச்சாளர் போன்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் இவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இப்படியானவர்கள், நீதிமன்றில் முன்வைக்கும் முதற்கட்ட விசாரணை அறிக்கையிலும் சந்தேகம் எழுகின்றது.

இவ்வாறான நிலையில்தான், குற்றம் சாட்டப்பட்டவரது நிலைப்பாடு தொடர்பிலும் சிந்தித்து, கடந்த அரசாங்கத்தில் தூக்குதண்டனையை நிறைவேற்றும் சட்டமூலத்தை நாம் நிறைவேற்றவில்லை.

அதேநேரம், நாட்டில் திடீரென தலைத்தூக்கியுள்ள பாதாளக்குழுக்களின் நடமாட்டமும், அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதையும் பார்க்கும்போது இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றதோ எனும் சந்தேகமும் எமக்கு எழுகின்றது.

ஏனெனில், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்திய முப்படையினருக்கு பாதாளக்குழுக்களை அழிப்பது ஒன்றும் சவாலான விடயமல்ல. அப்படியிருந்தும் அதனை மேற்கொள்ளாமல் இருப்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், மரண தண்டனை நிறைவேற்றபடும் என்று கூறியுள்ளமையெல்லாம் வெறும் நாடகம் என்பது தான் எமது கருத்தாக இருக்கின்றது.

முழுநாட்டுக்கும் உறுதியளித்த 100 நாள் வேலைத்திட்டத்தையே தனக்குத் தெரியாது என்றுக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிச்சயமாக இதனையும் நிறைவேற்ற மாட்டார். உண்மையில் இது மக்களை திசைத்திருப்பும் ஒரு செயற்பாடே ஆகும் என்றார்.