ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இருந்து வட மாகாணசபை உறுப்பினர் வெளிநடப்பு: காரணம் இதுதான்?

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போதே வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வெளிநடப்பு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை செவிமடுப்பதாக தெரியவில்லை. தன்னிச்சையாகவே செயற்படுகின்றார்.

அத்துடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களுக்கு சரியான முறையில் அழைப்பு விடுக்கப்படுவதில்லை. கிராமட்ட அமைப்புகளுக்கு கூட இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன், பிரதேச செயலாளர் ஒரு கட்சி சார்ந்து செயல்படுவதாகவே தெரிகிறது. அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுமாறு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தீர்மானம் எடுத்த பின்பும் கூட நடைமுறைகளில் எந்த மாற்றமும் வரவில்லை. இதன்காரணமாகவே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் தீர்க்கமான முடிவெடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.