மரண தண்டனையால் இலங்கை ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்க நேரிடலாம்?

Report Print Ajith Ajith in அரசியல்

மரண தண்டனை மீண்டும் அமுலாக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்க நேரிடலாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கைத்தொழில்துறை ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து கொண்டே மீண்டும் அந்த கடத்தல்களை வழிநடத்திய கைதிகளுக்கான தண்டனை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மரண தண்டனைக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டு வருகின்ற ஐரோப்பிய ஒன்றியம் 42 வருடங்களின் பின்னர் இலங்கை மீண்டும் அதனை அமுல்படுத்துவதை விரும்பாது என்று குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதரகம் இது தொடர்பில் தற்போதுவரை தமது உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

விரைவில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் இது குறித்த தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று இராஜதந்திர தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக இடம்பெற்ற போரில் மனித உரிமைகள் மீறப்பட்டமையினால், கடந்த 2010ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டது.

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers