போராட்டகாலத்தில் கடமையின் நிமித்தம் கல்வி கற்பிப்பதற்காக சென்று உயிர் நீத்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்பே நிகழ்வுகளை ஆரம்பிப்பது சால சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் ம.வி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
போராட்ட காலத்தில் கல்வி கற்று கொடுப்பதற்காக தனது கடமையின் நிமித்தம் சென்றபோது உயிர் நீத்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தி இப்படியான நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் சிலர் தமது சொந்தக் காலிலே, வசதியாக இருக்கின்ற போது தமது பெற்றோர்களின் அருமையை புரிந்து கொள்வதில்லை.
எனினும் எமது பிரதேசங்களில் அவ்வாறான நிலை இல்லை. நகர்புறங்களிலே அப்பா, அம்மாவை கொண்டு சென்று இல்லங்களிலே சேர்த்து விடுகின்றனர்.
அவர்கள் அங்கே பல்வேறு மன அழுத்தங்களுக்கு மத்தியிலே தமது இறுதி வாழ்நாளை செலவிடுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.