கோத்தாவை வெட்டியாடுகிறாரா மகிந்த?

Report Print Sathriyan in அரசியல்

2020 ஜனவரிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டிய நிலையில், அடுத்த ஜனாதிபதி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமக்குள் ஒருவரை மனதில் வைத்துக் கொண்டே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஐதேகவினர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமான வேட்பாளர் என்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு சிலர், மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் தெரிவாக வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் மகிந்த ராஜபக்ச கை காட்டுபவரால் தான் ஜனாதிபதியாக முடியும் என்கிறார்கள்.

அதேவேளை கூட்டு எதிரணி பொதுஜன முன்னணி, மகிந்த அணி என்று எந்தப் பெயரை வைத்துக் கொண்டாலும் அந்த தரப்பில் கோத்தபாய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச என்று பல பெயர்கள் முன்மொழியப்படுகின்றன.

ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது. ஏனென்றால் சிங்களத் தலைவர்கள் யாரையுமே அவர்கள் விருப்புக்குரிய தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. எனினும் கோத்தபாய ராஜபக்ச போன்ற அவரது தரப்பிலுள்ளவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் நிலைமைகள் வேறு மாதிரியாக உள்ளன. அங்கு கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தேவையான எல்லாச் சூழல்களும் உருவாக்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது.

ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பம் நிலவுகிறது. கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது பசிலுக்கும் மகிந்தவுக்கும் பிடிக்கவில்லை. கோத்தாவுக்கும் பஷிலுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நடக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வந்த போதும் அதனைப் பொய் என்று நிரூபிப்பதில் ராஜபக்சவினர் அதீத அக்கறை கொண்டுள்ளனர்.

அண்மையில் பொதுஜன முன்னணி தலைமையகத்துக்கு கோத்தபாய ராஜபக்சவுக்கு வந்ததும் அவருடன் மகிந்த, பஷில் இணைந்து நின்று எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று கூறியதும் கவனிக்கத்தக்க விடயங்கள்.

பொதுஜன முன்னணி தலைமையகத்துக்கு கோத்தபாய ராஜபக்ச வந்தது, அவரது அரசியல் பிரவேசமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் இன்னமும் தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அப்போது அவரது கையில் உள்ள அமெரிக்க குடியுரிமையும் அதனை விலக்கிக் கொள்ள முனையும் போது ஏற்படக் கூடிய சிக்கல்களும் அவர் தனது அரசியல் நுழைவு விடயத்தை அறிவிக்காமல் தாமதிப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

அதேவேளை, கோத்தபாய ராஜபக்ச ஒன்றும் சாதாரண அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை. அவர் பாராளுமன்றத் தேர்தலிலோ மாகாணசபைத் தேர்தலிலோ களமிறங்கத் தயாராக இல்லை.

அவரது ஒரே குறி ஜனாதிபதித் தேர்தல் தான். அண்ணன் அழைத்தால் வருவேன் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

சாதாரண அரசியலுக்கு வருவதாயின் அவர் ஏற்கனவே வந்திருப்பார் அதற்கு அவர் அண்ணனின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

உச்ச பதவியில் அமரும் இலக்கு மாத்திரமே கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கிறது. அதற்கான தடைக்கற்களும் அவருக்கு இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

முதலில் அவர் எலிய என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் வியத் மக அமைப்பை உருவாக்கினார். இப்போது தனது நெருங்கிய சகாவான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் ஹரி மக என்ற அமைப்பை கடந்த வாரம் உருவாக்கியிருக்கிறார்.

இந்த அமைப்புக்களின் ஊடாக கோத்தபாய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கும் இலக்குடன் முன்னாள் இராணுவ அதிகாரிகள், கடும் போக்கு சிங்கள பேரினவாதிகளால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எலிய, வியத் மக போன்ற கோத்தாவை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யும் அமைப்புகள் அனைத்துமே தெற்கிலுள்ள சிங்கள மக்களை மாத்திரமே குறிவைத்து செயற்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அதாவது தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் இந்த அமைப்புகள் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. இதிலிருந்தே அவர்கள் சிங்கள மக்களுக்கான கொள்கையை அவர்களுக்கான அரசியலை மாத்திரம் முன்னிறுத்திச் செயற்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அமைப்புகளின் கூட்டங்களில் உரையாற்றுபவர்கள் கோத்தபாய ராஜபக்ச போன்ற ஒருவரால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற தொனியில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரி மக அமைப்பை உருவாக்கும் கூட்டத்தில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெளிவான பார்வையும் உறுதியான முடிவையும் எடுக்கக் கூடிய ஒருவர் தான் நாட்டின ஜனாதிபதியாக வேண்டும் என்றும் அத்தகைய தகைமையுடைய ஒரே ஒருவர் கோத்தபாய ராஜபக்ச தான் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவுக்காக தொடர்ச்சியாக பிரசாரங்களில் ஈடுபட்டு வருபவர் கமல் குணரத்ன. அவர் இப்போது ஹரி மக அமைப்புக்கு தலைமை தாங்கி அந்தப் பிரசாரங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முனைகிறார்.

அதேவேளை கண்டி பூஜாப்பிட்டியவில் கடந்த வாரம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய இலங்கை இராணுவத்தின் முன்னாள் தொண்டர் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் லலித் தவுலகல இராணுவத்தினரின் கஷ்டங்களை அறிந்த ஒருவரே அடுத்த முறை ஜனாதிபதியாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவர் இராணுவத்தினரின் கஷ்டங்களை அறிந்த ஒருவர் என்று கூறுவது கோத்தபாய ராஜபக்சவைத் தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் பெரிய மூளைசாலியாக இருக்க வேண்டியதில்லை.

மேஜர் ஜெனரல் லலித் தவுலகலவும் கூட கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் தான் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, லெப்.கேர்ணல் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் லலித் தவுலகல ஆகிய மூவரும் கஜபா படைப்பிரிவை சேர்ந்தவர்கள். போர்முனையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.

அவர்கள் இராணுவத்தை விட்டு வெளியே வந்த பின்னரும் சில வேலைத் திட்டங்களுக்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். முப்படைகளையும் சேர்ந்த பல படையதிகாரிகள், முன்னாள் தளபதிகள், கோத்தபாய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கி விட வேண்டும் என்ற இலக்குடன் திரிகிறார்கள்.

இராணுவத்தினரின் துன்பங்களை அறிந்த ஒருவர் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்றால் அதன் அர்த்தம் என்ன? முப்படைகளையும் சேர்த்தால் மூன்று லட்சம் பேர் கூட வராது. ஆனால் இலங்கையின் மொத்தச் சனத் தொகை 24 மில்லியன்.

24 மில்லியன் மக்களின் துன்பங்களை அறிந்தவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டுமா அல்லது வெறும் 3 லட்சம் படையினரின் துன்பங்களை அறிந்த அவர்களின் விருப்புக்கேற்ப செயற்படக்கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

தமக்குப் பிடித்தமான ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்ப்பது அவரது தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் அதனை அடுத்தவர் மீது திணிக்க முற்படுவது தான் பிரச்சினை.

கோத்தபாய ராஜபக்ச விடயத்தில் அவரை அடுத்த ஜனாதிபதியாக்கி விட வேண்டும் என்பதற்காக திணிப்பு முயற்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த, மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கையான நெருக்கமான ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அண்மையில் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை முக்கியமானது.

அது கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக உள்ளது.

மக்களின் துன்பங்களை அறிந்த ஒருவர் தான் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும். அதற்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு பிரதேச சபை உறுப்பினராகவேனும் இருந்தால் தான் அவரால் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.

ஆனால் கோத்தபாய ராஜபக்ச பிரதேச சபை உறுப்பினராகவேனும் இருந்தவரில்லை. அவர் வெறுமனே இராணுவத்தினரின் பிரச்சினைகளை புரிந்து கொண்டவராக மாத்திரமே இருந்தாரேயன்றி மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டவராக இருக்கவில்லை.

குமார வெல்கம மாத்திரமன்றி கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படும் திஸ்ஸ விதாரணவும் கூட இடதுசாரிக் கட்சி என்ற வகையில் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே வாசுதேவ நாணயக்காரவும் கூட கோத்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

கோத்தபாய ராஜபக்சவை அரசியலில் முற்படுத்தும் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ள சூழலில் ஒரு பக்கத்தில் அவரை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரங்கள் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் அதற்கு மாறான பிரசாரங்களும் தீவிரமடையத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மகிந்த தரப்பில் இருந்தே இந்த எதிர்ப்புக் குரலும் எழும்புகிறது மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான் இதனை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது மகிந்தவின் இன்னொரு திட்டத்தை செயற்படுத்துவதற்கான முன்னாயத்தமோ என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக முற்படுத்த வேண்டிய நெருக்கடி மகிந்தவுக்கு அதிகரித்திருந்தாலும் அதனை வேறொரு வழியில் வெட்டியாடுவதற்கு மகிந்த திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

பொதுஜன முன்னணி தலைமையகத்துக்கு கோத்தபாய ராஜபக்ச சென்ற பின்னர் ராஜபக்சவினர் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார் சமல் ராஜபக்ச.

இது எதனைக் காட்டுகிறது என்றால் ராஜபக்சவினர் ஒன்றாக இல்லை அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன என்பதைத் தானே.

அவ்வாறாயின் கோத்தபாய ராஜபக்சவை வெட்டியாடுவதற்கு மகிந்த ராஜபக்ச முற்படுகிறாரோ என்று சவந்தேகம் எழுவதில் ஆச்சரியமில்லையே.