அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முப்படையினரின் நேரடியான பங்களிப்பை பெற்றுக்கொள்வது என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் பல்வேறு மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அது மனித உரிமை மீறல் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சில நபர்கள், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர். பொலிஸார் கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இதனை செய்கின்றனர்.

பொலிஸாரினால், கைதுசெய்யப்பட்ட நபர்கள் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இன்றி கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இது மிகவும் மோசமான மற்றும் மனித உரிமையை மீறும் செயல். இப்படியான சம்பவங்கள் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் நடந்தன.

அதேபோல் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முப்படையினரின் பங்களிப்பை பெற அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை நான் எதிர்க்கின்றேன். இது முப்படையினரின் பணியல்ல. அது பொலிஸாருக்கு உரிய கடமை எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.