ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால்.....! இது கோத்தபாயவின் வாக்குறுதி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து இயங்கும் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஊடகத்திற்கு கருத்துரைத்துள்ள அவர்,

ஜனாதிபதி தேர்தலில் எனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னைத் தேர்தலில் நிறுத்தினால் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

நான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்ற தவறான கருத்து இப்போது பொய்யாகியுள்ளது. இப்பொழுது தமிழ் பேசும் மக்களும் கூட இந்தமுறை எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோன்று, முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பார்கள். மகிந்த ராஜபக்சவுக்காக தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்.

தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அவர் வடக்கு, கிழக்கில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்வேன் என்றார்.