தீர்வுக்கு முதலிடம் உடன் வழங்குங்கள்: மைத்திரியிடம் இந்தியா வலியுறுத்து

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் நீண்டகாலத் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகவே தீர்வைக் காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

எனவே, இந்தக் கூட்டரசு தீர்வு விடயத்துக்கு முதலிடம் கொடுத்து அதனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார் இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோகலே.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைத் தனித்தனியாகத் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நேற்றுமுன்தினம் காலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய இந்திய வெளிவிவகார செயலர், மாலை 3 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் அரசியல் தீர்வு விவகாரம், வடக்கு, கிழக்கில் இந்திய முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளின் மீள் வருகை குறித்து இந்திய வெளிவிவகார செயலரும் கூட்டமைப்பின் தலைவரும் பேச்சு நடத்தியிருந்தனர்.

இந்தச் சந்திப்பை முடித்த கையோடு மாலை 4.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு இந்திய வெளிவிவகார செயலர் சென்றார்.

அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் தீர்வு விவகாரம் குறித்தே நீண்ட நேரம் அவர் பேச்சு நடத்தினார்.

இதன்போது,தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து அக்கறை செலுத்திக் கொண்டு இருக்கின்றது. தங்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தலில் தமிழ் மக்களுக்கும் பெரும் பங்குண்டு.

இலங்கையின் நீண்டகாலத் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகவே தீர்வைக் காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

எனவே, தாங்களும் தங்கள் தலைமையிலான இந்தக் கூட்டரசும் தீர்வு விடயத்துக்கு முதலிடம் கொடுத்து அதனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வைக் காண வேண்டும்.

இது இந்திய மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது என்று இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோகலே தெரிவித்தார் என அறியமுடிகின்றது.