வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மிகவும் மோசமாக வாட்டியிருந்தது கடந்த கால யுத்தம்

Report Print Rakesh in அரசியல்

கடந்த கால யுத்தம் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களை மிக மோசமாக வாட்டியிருந்தது என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, அல் அமான் விளையாட்டுக்கழகம் நடத்திய 3 நாள் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பதவியையும், அதிகாரத்தையும் இறைவன் எமக்கு இலகுவாக தந்துவிடவில்லை.

அகதி முகாமில் இருந்து கரடுமுரடான பாதையில் பயணித்து நாம் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் மேற்கொண்ட முயற்சிகளினாலேயே இறைவன் இவ்வாறான அந்தஸ்தை தந்துள்ளான்.

நான் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலங்களில், அனைத்தையுமே இழந்து துன்பத்திலே உழன்று கிடந்த நமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சில பணிகளை முன்னெடுத்தேன்.

எனினும், கடந்த கால யுத்தம் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களையும் மிகவும் மோசமாக வாட்டியிருந்தது. அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கு நாம் சென்ற போது அவர்கள் படுகின்ற கஷ்டங்களை கண்கூடாக கண்டோம்.

எனவே தான் இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் நமது பணிகளை விஸ்தரித்தோம்.

எம்மால் முடிந்த வரை நாம் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் பணியாற்றி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.