18 பேரையும் தூக்கில் போட்டால் அனைத்தும் சரியாகி விடுமா? மைத்திரியிடம் கேள்வி

Report Print Akkash in அரசியல்

இலங்கையில் மரண தண்டனை இருக்கின்றது, ஆனால் அதை நிறைவேற்றுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ராஜ கொல்லுரே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

1956ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பண்டாரநாயக்க காலத்தில் இருந்து இன்று வரை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

ஆனால் தற்போது மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த உலகத்தில், 104 நாடுகளில் மரணதண்டனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 56 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றினாலும், 30 நாடுகளே கட்டாயமாக மரண தண்டனையை நிறைவேற்றுகின்றன.

இது வாழ்க்கை பற்றிய பிரச்சினை, உயிர் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை எக்காரணத்திற்காகவும் இல்லாமல் ஆக்குவது நீதியான விடயம் இல்லை.

போதைப் பொருள் கடத்துபவர்களுக்கே இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தற்போது 18 பேரின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 18 பேருக்கும் மரண தண்டனை கொடுத்துவிட்டால் இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையும், போதைப் பொருள் கடத்தலும் கட்டுப்படுத்தப்படுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ராஜ கொல்லுரே தெரிவித்தார்.