விக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடத்தில் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லை: கூட்டமைப்பின் முக்கியஸ்தர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடத்தில் எவ்விதமான பாரிய குற்றச்சாட்டுக்களும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சொலிஸிட்டர் ஆர்.டி.இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் தான் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தற்போது உள்ள சூழலில் எதிர்வரும் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தேன்.

அந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்கு இன்னமும் காலம் உள்ளது என்றே என்னிடத்தில் குறிப்பிட்டார். அதனைவிடவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.

தேர்தல் காலத்தில் அவர் ஒதுங்கியிருந்தமை மற்றும் வடமடாகாண அபிவிருத்தி விடயங்களில் மேலும் பலவற்றை செய்திருக்க முடியும் ஆகியன தொடர்பிலேயே தலைவரிடத்தில் குறைகள் காணப்படுகின்றன.

இந்த விடயங்களைப் பெறுத்தவரையில் முதலமைச்சர் ஆகக்குறைந்தது 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்திலாவது பங்கேற்றிருந்தால் இவ்வளவு தூரம் நிலைமைகள் மோசமடைந்திருக்காது என்பதோடு கட்சிக்குள்ளே இருந்து கொண்டு பேச்சுக்களை நடத்தி தீர்வுகளை எடுத்திருக்கலாம்.

அந்த விடயத்தில் குறைபாடான நிலையொன்று ஏற்பட்டு விட்டது என்பதே எனது நிலைப்பாடாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.