இலங்கை, சிங்கப்பூர் உடன்படிக்கையை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்: தினேஸ் குணவர்த்தன

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டுக்கு மோசமான தன்மைகளை கொண்ட இலங்கை சிங்கப்பூர் உடன்படிக்கையை உடனடியாக இடைநிறுத்தி உடன்படிக்கையின் சரத்துக்களை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதியை பெறாது அரசியலமைப்பை மீறியே செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதில் அச்சுறுத்தலான விடயங்கள் பல காணப்படுகின்றன. இதனால் இந்த உடன்படிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

குறித்த உடன்படிக்கையை செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஆனால் யாருடனும் கலந்துரையாடாது அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது அவசரமாக அந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறான உடன்படிக்கைகளை செய்து கொண்டதன் மூலமாக எமது உள்நாட்டு கைத்தொழில் துறையினருக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.