வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரும் அவருடன் இணைந்து சில உத்தியோகத்தர்களும் கடந்த 8 வருடங்களாக 18 இற்கு மேற்பட்ட மோசடிகளை செய்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகர்தர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். நான் வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியமைக்காவும், அந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளரை அவமரியாதைப்படுத்தி பேசியதாகவும் கூறியே அந்த ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர்.

ஆனால் அவ்வாறு இல்லை. எதிர்வரும் காலத்தில் வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் வேலைத்திட்டங்களை மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே செலவு செய்வதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 200 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தது. ஆனால் இதுவரை மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கு தெரியப்படுத்தவில்லை.

இதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே வெளிநடப்பு செய்தேன். அத்துடன் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், பிரதேச செயலாளருக்கு உடந்தையாகசெயற்படுபவர்களை இனங்காணுவதற்காகவுமே அவ்வாறு நடந்து கொண்டேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேசத்தில் கடந்த 8 வருடங்களாக பிரதேச செயலாளரும் இன்னும் சில உத்தியோகத்தர்களும் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாழ்வாதாரம், காணி கையகப்படுத்தல், சமுர்த்தி வங்கி மோசடி என 18 விடயங்கள் மோசடி தொடர்பில் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கில் குறித்த பிரதேச செயலாளாரின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

குறித்த ஆதாரங்களை திரட்டி லஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட ஊழல் ஒழிப்பு அமைப்புக்களிடம் கையளித்து பல ரூபாய் மோசடியை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்பேன்.

எனக்கு எதிராக போராட்டம் செய்வதாக கூறி ஒரு மோசடியான பிரதேச செயலாளருக்காக போராட்டம் நடத்திய இளம் பட்டதாரி உத்தியோகர்தர்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன்.

வவுனியா வடக்கில் குடியேற்றங்கள் வந்த போது ஏன் ஒரு ஆர்ப்பாட்டத்தை உங்களால் நடத்த முடியாமல் போனது. அல்லது ஏன் பாதிக்கப்படட மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் போனது. ஊழலை ஏன் தடுக்க முடியாமல் போனது என கேள்வி கேட்கின்றேன்.

தனவந்தர்களும், அரசியல் செல்வாக்கு உடையவர்களும், வெளிநாட்டுக்காரரும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இலகுவாக தமது தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் அலைந்து திரிகிறார்கள். விசாரணையின் மூலம் வவுனியா வடக்கின் மோசடிகள் அம்பலத்திற்கு வரும எனத்தெரிவித்தார்.