1398 மில்லியன் ரூபா மோசடி! விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்

Report Print Murali Murali in அரசியல்

1398 மில்லியன் ரூபா மோசடி தொடர்பான விசாரணைகள் எந்தவகையிலும் நிறுத்தப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு எம்.பிக்கள் சிலர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பெருமளவு காசோலைகள் வங்கிகளினூடாக மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளதோடு அவை ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சரத் திசாநாயக்க என்பவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய 2016 மே 9 ஆம் திகதி பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. இந்த விசாரணைகளின் பிரகாரம் 2014 டிசம்பர் ஒன்று 2015 ஜனவரி 8 வரை 82 காசோலைகள் மாற்றப்பட்டு 1398 மில்லியன் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது.

இவை ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சைனா ஹாபர் நிறுவன காசோலையும் இதில் அடங்கும். இது தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணை பிரிவினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கோப்புகளை கையளித்துள்ளது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லசந்த கோதாகொடவின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் எந்தவகையிலும் நிறுத்தப்படவில்லை என பிரதமர் இங்கு உறுதிபட கூறியுள்ளார்.

இதனுடன் தொடர்புள்ள ஸ்டேன்டன் சார்டட் வங்கி காசோலையை மத்திய வங்கி 2015 இல் சி.ஜ.டியிடம் ஒப்படைத்திருந்தது. இது தொடர்பில் சில சாட்சியங்கள் கிடைத்துள்ளதோடு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் ஆலோசனைப் படி இது தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இருக்கும் பிரிவை மத்திய வங்கியினால் நிறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.