வடக்கு முதல்வர் விக்கியின் தலை தப்புமா? கொந்தளிக்கும் தமிழ் தரப்புகள்!

Report Print Nivetha in அரசியல்

தமிழ் அரசியல் சூழலில் விஜயகலா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்ற நிலையில் வடமாகாண சபையின் பதவிக் காலம் தொடர்பில் தமிழ் தரப்புகள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

வடமாகாண சபை தேர்தலின் ஊடாக அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வடமாகாண முதல்வராக அமோகமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வடமாகாணத்தின் அரச நிர்வாகம் தமிழ் மக்களின் கைகளில் வந்தமையும், நீதித்துறையில் முதிர்ந்த அனுபவம் பெற்ற முன்னாள் நீதியரசராகிய விக்னேஸ்வரன் அதன் முதல்வராக தெரிவாகியமையும் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் அரசியலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

கடும் போக்கைக் கொண்ட இலங்கை அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான பல அழுத்தங்களை கொடுத்து நியாயமான ஓர் அரசியல் தீர்வை நோக்கி செல்வதற்கு உறுதுணை புரியும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் நிலவியிருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் போராடத்தில் கிடைப்பதை பெற்று, குறைந்ததைக் கொண்டு, கூடிய நிலைமைகளை நோக்கி நகர்ந்து செல்லுகின்ற அரசியல் சாணக்கிய முறை பின்பற்றப்படவில்லை என்ற ஒரு பொதுவான கருத்து அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியாக செயற்பட்டு வந்த பல கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் உறுதியாக செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதைத் தவிர்த்து ஒன்றிணைந்து அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், அந்த ஒற்றுமை நிலைக்கவும் இல்லை சாத்தியமாகவும் இல்லை.

ஒன்றே ஒன்றை மட்டும் கூறலாம். பல அணிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை மட்டுமே சாதித்தார்கள் எனலாம்.

ஓர் அணி என்ற ஒற்றுமையான அரசியல் கூட்டமைப்பு சார்ந்த செயற்பாட்டுக்கான வழி திறக்கவே இல்லை. கூட்டுச் சேர்ந்த அணிகளுக்கிடையேயும் பல்வேறு பிச்சுப் பிடுங்கல்களே இருந்தன.

பல்வேறு அரசியல் தந்திரோபாய அரசியல் நகர்வுகளின் மூலம் தமிழர் தாயக பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் மீண்டும் ஒன்றிணைய விடாமல் தடுத்து, தமிழர் தாயகம் என்ற அந்த வரலாற்று அந்தஸ்தை இல்லாமல் செய்வதற்காக அரசுகள் எடுத்த முயற்சிகளையும் முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழர் அரசியல் கட்சிகளினால் முன்னெடுக்க முடியவில்லை.

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அந்தத் தாயகத்தில் பகிரப்படாத இறைமையுடன் கூடிய சுய ஆட்சி என்ற அரசியல் கனவு குறித்த பிரசாரங்கள் மாத்திரமே முடக்கி விடப்பட்டன.

ஆனால், அந்த இலட்சியத்தையும், இலக்கையும் அடைவதற்கான இராஜ தந்திரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கோஷங்கள் இன்று வரையும் வெற்றுக் கோஷங்களாகவே காணப்படுகின்றன.

அரசியல் நோக்கில் இன்று வரையும் எவ்வித முன்னேற்றங்களையும் காண முடியவில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் வடக்கிலும் சிங்கள குடியேற்றங்கள் வலிந்து மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பாரம்பரிய சூழலில் இராணுவ மயமான குடியிருப்புகள் காணப்பட்டன.

இதேவேளை, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தனித்துவமான தமிழ், முஸ்லிம் குடியிருப்புகளை இல்லாது அழிப்பதற்காக இராணுவத்தின் நிழலில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மத சின்னங்களையும் நிறுவும் பணிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. வட மாகாண சபையும் அர்த்தம் உள்ள வகையில் செயற்பட வில்லை என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் பின்னால் தமிழ் மக்கள் ஒன்றாக திரண்டிருக்கின்றார்கள் என்பதை காட்டுவதன் ஊடாக சர்வதேசத்தின் பார்வையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பக்கம் திருப்பி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதற்கமைய வடமாகாண சபையின் நிர்வாகம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்தார்கள் என்றும் பெரும்பான்மை பலத்துடன் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற கூட்டமைப்பின் வடமாகாண நிர்வாகம் எவ்வாறு நடந்து கொண்டது?

பல விடயங்களை சாதிக்கக் கூடிய வலிமை பொருந்தியவர் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் எதனை சாதித்திருக்கின்றார்?

வடக்கு மாகாணசபை மக்களுடைய எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற தவறியதால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் உள்ளனர். இதனால் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிர்வாக பொறுப்பை ஏற்ற வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிய இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. இந்த நிலையிலும் கூட உறுப்பினர்களுக்கு இடையில் போட்டிகளும் சர்ச்சையுமே நிலவுகின்றது.

இவ்வாறான சூழலில் வடக்கு முதல்வரின் தலைமை பதவி நிலைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

அதுமட்டும் இன்றி, தமிழ் மக்களும் மாற்றத்தினையே விரும்புகின்றனர். புதிய மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று எண்ணுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் புதிய மாற்றம் தமிழ் மக்களின் நீண்ட கால வரலாற்றை புரட்டிப் போடுமா? என்று...,