விக்னேஸ்வரனுக்கு எதிரான வியூகம்!

Report Print Habil in அரசியல்

குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள், அதேபோல் குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள் தான்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் நடந்து கொள்ளும் முறைமையைப் பார்த்தால் மேற்சொன்ன விடயமே நினைவில் வருகிறது.

2013ம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு விக்னேஸ்வரனை வருந்தி அழைத்து வந்த தமிழரசுக் கட்சி பின்னர் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் அளவுக்குச் சென்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட விரிசல்களே இதற்குக் காரணம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொழும்பு அரசிடம் விலை போய் விட்டவர் போன்று கூட்டமைப்பின் தலைமையை காட்டமாக விமர்சிப்பதும், அதற்குப் பதிலாக . முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியினர் தூற்றுவதும் வாடிக்கையான அரசியலாக மாறியிருந்தது.

இந்தச் சூழலில் . முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்று அரசியல் சக்தி ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தவும் கூட்டமைப்புக்கு வெளியே உள்ள தரப்புகள் பல முற்பட்டன.

அதற்கான சில கட்டமைப்பு சார் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அதற்கிடையில் சில உள்ளக, வெளியக அழுத்தங்கள் முதலமைச்சர் தனது முடிவுகளில் இருந்து பின்வாங்கும் நிலையை அல்லது மறுபரிசீலனை செய்யும் நிலையை தோற்றுவித்திருக்கிறது.

அதுபோன்று . முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வந்ததன் காரணமாக அவரை முன்னிறுத்தி ஒரு மாற்று அரசியல் சக்தியைக் கட்டியெழுப்ப முற்பட்ட தரப்புகள் இப்போது சற்றுத் தயக்கம் காட்டவும் தொடங்கியுள்ளன.

எந்தளவுக்கு அவர் உறுதியாக இருப்பார் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது உண்மை. அதிலும் அண்மையில் நீதியரசர் பேசுகிறார் நூல் வெளியீட்டு விழாவுக்குப் பின்னர் . முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில் சற்று அடக்கியே வாசிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த பல மாதங்களாக வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும், கூட்டமைப்பு தலைமையை கேள்விக்குட்படுத்தியும் . முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அண்மைய அறிக்கைகள் தலைகீழாக மாறியிருக்கின்றன.

அவர் இப்போது கூட்டமைப்பின் உள்ளக விவகாரங்களை விமர்சனம் செய்யும் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டமைப்புக்கு வெளியே உள்ள பிரச்சினைகளைப் பற்றியே அவர் இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்.

இது ஒரு முக்கியமான மாற்றத்துக்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. அதைவிட இப்போது சம்பந்தனின் கருத்தை அவர் ஒரு சில சந்தர்ப்பங்களில் உதாரணம் காட்டியும் பேசியிருக்கிறார்.

அண்மையில் யாழில் கனேடியத் தூதுவரைச் சந்தித்த போது கூட எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறியது போல இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றுக்கு அப்பால் பேச்சு வாக்கில் கனேடியத் தூதுவர் எழுப்பிய தனிக்கட்சி தொடங்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு அத்தகைய எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லை என்றும் . முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிக்காவிடின் என்ன செய்வீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு நான் வீட்டுக்குச் செல்லலாம் இல்லையேல் வேறொரு கட்சியில் இணைந்து போட்டியிடலாம். அல்லது தனிக்கட்சியைத் தொடங்கலாம் என்று தான் பதிலளித்திருந்தேன்.

ஆனால் ஊடகங்கள் நான் கூறிய முதலிரு விடயங்களையும் விட்டுவிட்டு தனிக்கட்சி என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி பெரிதாக்கி விட்டன என்று ஊடகங்களின் மீதே பழியைப் போட்டிருந்தார் அவர்.

எது எவ்வாறாயினும் கனேடியத் தூதுவரிடம் புதிய கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இது முக்கியமானது.

ஒரு நீதியரசராக ஒரு முக்கியமான நாட்டின் இராஜதந்திரிக்கு கூறிய இந்த வாக்குறுதியை அவர் ஊடகங்களிடமும் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.. இது அவர் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் வாய்ப்பு இல்லை போன்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.

முதலமைச்சரின் இந்தக் கருத்து அவரை முன்னிறுத்தி மாற்று அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப்பக் காத்திருந்த தரப்புகளுக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது.

அத்தகைய மாற்று அரசியல் தலைமைக்கு விக்னேஸ்வரனைக் கொண்டு வருவதற்கு ஊடகங்கள் வாயிலாக பரப்புரைகளை முன்னெடுத்த பலரும் இப்போது அவரை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது அவர் மீதான ஏமாற்றத்தின் வெளிப்பாடு தான். இந்தக் கட்டத்தில் தான் . முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினர் மீண்டும் தூற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் நீக்கப்பட்டமை செல்லுபடியற்றது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவை வைத்துக் கொண்டு . முதலமைச்சர் விக்னேஸ்வரனை பழிவாங்கவோ அவரை சிக்கலான நிலைக்குள் தள்ளவோ தமிழரசுக் கட்சியினர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வடக்கு மாகாண சபையில் அண்மையில் நடத்தப்பட்ட விவாதங்கள் அதனை ஒட்டியதாக முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் எல்லாமே முதலமைச்சர் விக்னேஸ்வரனை நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கத்தைக் கொண்டவை.

முதலமைச்சர் தவறான முடிவை எடுத்து விட்டார் சட்டம் படித்த நீதியரசரே சட்டத்துக்கு மாறாக நடந்து விட்டார் என்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதில் தான் அக்கறை காட்டப்படுவதாகத் தெரிகிறது.

டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சராக்கும் நோக்கில் தமிழரசுக் கட்சியினர் சிலர் செயற்பட்டாலும் அவர்களின் நோக்கம் அதுவாகத் தெரியவில்லை.

டெனீஸ்வரன் விவகாரத்தைப் பயன்படுத்தி . முதலமைச்சர் விக்னேஸ்வரனை சிக்கலுக்குள் தள்ளி ஒதுக்கி வைக்கும் நோக்குடனேயே காய்கள் நகர்த்தப்படுகின்றன.

அதுவும் நீதியரசர் பேசுகிறார் நூல் வெளியீட்டுக்குப் பின்னர் . முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான மெல்லிய உறவுகள் மீண்டும் துளிர்க்கின்ற வாய்ப்புகள் தென்பட்ட பின்னர் தான் இந்தப் புதிய தோண்டல்கள் நடக்கின்றன.

இந்த மெல்லிய உறவுகளை துளிர்க்கத் தொடங்கியதை விரும்பாத தரப்புகள் இந்த விடயத்தில் கூடுதல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் அதிகாரபூர்வ பிரசார ஊடகம் என்று கூறப்படும் புதிய சுமந்திரனிலும் . முதலமைச்சர் விக்னேஸ்வரனை சீண்டும் வகையில் அவருக்கு எதிரான கட்டுரைகள் பல வெளியிடப்பட்டுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தம்.

தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டு விடுமோ தமிழரின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற பரவலான அச்சம் தோன்றியிருந்த நிலையில் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பில் சில மாற்றங்களுக்கான சமிக்ஞைகள் வெளிவரத் தொடங்கின.

இந்த மாற்றம் இயல்பானதா அல்லது திணிக்கப்பட்ட ஒன்றா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அவருக்கும் இடையிலான உரையாடல் வெளியில் காணப்பட்ட விரிசலைக் குறைக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சியினர் மீண்டும் விக்னேஸ்வரனை துரத்தத் தொடங்கியுள்ளதால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மாறியிருக்கிறது.

மீண்டும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வந்து விடுவாரோ அதற்கு இடமளிக்க வேண்டி வந்து விடுமோ என்ற அச்சமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

காரணம் எதுவானாலும் . முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழைரசுக் கட்சி மீண்டும் பழைய பாணியில் நடத்தத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான ஒன்றாகப் படவில்லை.

இங்கு தான் குட்டக் குட்டக் குனிபவனும் குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெறுப்பின் உச்சத்துக்குக் கொண்டு போய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாமல் தூர விலத்தி நிற்க வைக்கும் நிலைக்கு கொண்டு செல்வது தான் தமிழரசுக் கட்சியினரின் யுக்தியாக இருந்தால் அவர்கள் அதற்காக ஒருவேளை வருந்தக் கூடிய நிலையும் ஏற்படலாம்.

அவரை முன்னிறுத்தி அரசியலை முற்கொண்டு செல்லக் காத்திருக்கும் தரப்புகள் இன்னமும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. இப்படியான நிலையில் அவர் தொடர்ந்து குட்டுப்பட்டுக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் அவர் தான் தனிக்கட்சியை ஆரம்பிக்க மாட்டேன் என்று கனேடியத் தூதுவரிடம் கூறிவிட்டாரே, பிறகெப்படி அதனை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பலாம்.

ஒரு நீதியரசராக அவர் அதனை செய்ய முடியாது தான். ஆனால் அவர்களே துரத்தும் போது வேறென்ன செய்ய முடியும் என்று அவர் ஒரு சட்டத்தரணியாக மாறி தன்னைப் பாதுகாக்கத் தவறமாட்டார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.