மஹிந்தவை போன்று மைத்திரி போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளுக்கு செல்வதில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

பாதாள உலகக் குழுவினருக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பினை நிரூபிக்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.

கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தெடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாதாள உலகக் குழுவினர் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணுகின்றார்கள் என சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பதவி வகித்த 2013ஆம் ஆண்டில் 55,000 குற்றச் செயல்கள் பதிவாகியிருந்ததுடன், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 30,000 வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் எதனோல் இறக்குமதியாளர்கள் உள்ளிட்டவர்கள் அரசாங்கத் தரப்பினருடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணியிருந்தனர்.

மஹிந்த அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்து வந்தது. தற்போதைய அரசாங்கம், அமைச்சர்களைக் கூட தண்டித்து சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தி வருகின்றது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை போன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளுக்கு செல்வதில்லை. வெள்ளை வான் கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுவினருடன் அமைச்சர்கள் தொடர்பு பேணவில்லை, அது தொடர்பில் குற்றம் சுமத்துவோர் முடிந்தால் அதனை நிரூபிக்க வேண்டுமென சம்பிக்க ரணவக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.