சர்வதேசம் வியக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்த மஹிந்த! கோத்தபாய பெருமிதம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியா - சினிசிட்டா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அனைத்து துறைகளிலும் பாரபட்சமற்ற அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில், தற்போது அவை அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதேவேளை கிராமங்களில் உள்ள கலாச்சாரத்தை சீரழிப்பதற்கு கம்பெரலிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவை தெரிவு செய்யும் போது பல பொறுப்புகளுடனும், சவால்களுடனுமே அவரிடம் நாடு கையளிக்கப்பட்டது.

குறிப்பாக மக்களின் பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வை அழித்த தீவிரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் விழுந்து கிடந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டது.

அந்த சவாலை ஏற்று மிக குறுகிய காலத்திற்குள் புரையோடி போயிருந்த தீவிரவாதத்தை அவர் முதலில் ஒழித்தார். அதேபோல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அபிவிருத்தியையும் முன்னெடுத்தார்.

வடக்கு, கிழக்கில் அழிந்து போன மனித வாழ்வை உயர்வடையச் செய்தார். அதேபோல் சர்வதேசம் வியக்கும் வகையிலான அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்.

அதற்கமைய மத்தல விமான நிலையத்தையும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அமைத்தார். ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்து கனவாக காணப்பட்டவற்றை மஹிந்தவே நனவாக்கினார் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers