இந்தியா நோயாளர் காவு வண்டிச் சேவை வழங்கிய நிலையில் 4800 கோடி கொடையை வழங்கிய சீனா

Report Print Ajith Ajith in அரசியல்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இலங்கைக்கு சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்திற்கு அமைய, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன ஜனாதிபதியினால் இந்தக் கொடையை வழங்கியுள்ளார்.

இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

பொலன்னறுவவில் நேற்று முன்தினம் நடந்த, சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது குறித்த கொடை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

'மருத்துவமனைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குறித்த பேச்சுக்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எனது பணியகத்துக்கு வந்த சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன ஜனாதிபதியின் இந்தக் கொடை குறித்து குறிப்பிட்டார்.

இந்தக் கொடையைப் பயன்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் சீனா கேட்டுக் கொண்டது.

இதற்கமைய, இந்த முழுக் கொடையையும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வீடுகளை அமைக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான திட்ட அறிக்கை சீனாவிடம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மில்லியன் ரூபா செலவிடப்படும்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா 7.6 மில்லியன் டொலரை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள தருணத்தில் சீனாவின் இந்த கொடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் சுகப்படுத்தும் சேவை நோயாளர் காவு வண்டிச் சேவை கடந்த சனிக்கிழமை வடக்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், சீனா 4800 கோடி ரூபா கொடையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

Latest Offers