சிறப்பாக நடைபெற்ற தேசிய விவசாய விருது வழங்கும் விழா

Report Print Vamathevan in அரசியல்

2018 ஆண்டின் கமத்தொழில் அமைச்சின் தேசிய விவசாய விருது வழங்கும் விழா கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த விழாவில் கமத்தொழில் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

நவீன விவசாய உபகரணங்கள் குறித்த கண்காட்சியும் இங்கு இடம்பெற்றிருந்தது.

இதன் போது விவசாய பிரதி அமைச்சர் உரையாற்றும் போது,

தேசிய ரீதியிலான அங்கீகாரம் விவசாய பெருமக்களை நாட்டின் அபிவிருத்தியாளர்களின் அடையாளமாக மிளிர செய்வதோடு தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

இலங்கை தேசம் தன்னிறைவடைந்து கொள்வதற்கு ஒவ்வொரு விவசாயினதும் இறைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் சந்ததியினரும் விவசாய வலைப்பின்னலில் இணைந்து ஊற்றெடுக்க நாம் உந்துதலாய் இருக்க வேண்டும்.

மரபு ரீதியான செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளின் பழமையை பாதுகாப்பதோடு, மனித தேவைகளுக்கு ஈடுசெய்யக் கூடிய வழங்கலை ஏற்படுத்த நவீன விவசாய செய்கை உள்வாங்கப்படுதல் வேண்டும்.

இது நமது நாடு மொத்த உணவு தேவையில் ஓரளவு தன்னிறைவு பெறுவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வழி வகையை ஏற்படுத்தும்.

விவசாய பெருமக்களின் வருமானத்தை பெருக்கக்கூடிய காரணிகளாக உற்பத்தி திறனின் மேம்பாடு, இடு பொருள், உபயோகிக்கும் திறனின் மேம்பாடு, பயிர் சுலற்சியின் அடர்த்தியை அதிகப்படுத்துதல், பணப்பயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல், தங்கள் பயிர் திட்டங்களை மாற்றுதல் போன்ற வகைமைகள் காணப்பட்டாலும் உழவர் பெருமக்களுக்கு சிறந்த அதித வருமானத்தை பெற்றுத்தர கூடிய மிகப்பெரிய காரணியாக இருப்பது சந்தைப்படுத்துதலே.

விவசாய பொருளாதாரத்தில் மாற்றத்தையும் மிக குறைவாக உள்ள விவசாய சந்தைகளின் செயல் திறனை தாண்டி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் நவீன விற்பனை உத்திகளான, ஒப்பந்த பண்ணையம் நேரடி சந்தை, எதிர்கால சந்தை குழு சார்ந்து சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி சந்தை போன்றவற்றை உழவர்களிடம் பரவலாக்கம் பெற செய்ய வேண்டும்.

பாரம் பரியமாகவும் பரம்பரை ரீதியாகவும் எமது தேவைகளை பூர்த்தி செய்யும் நம்மவர்களை பாதுகாக்க அவர்களுடைய கட்டமைப்புக்களை சீர் செய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என கமத்தொழில் பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.