சுதந்திரக்கட்சியின் தலைமையுடன் அதிகாரத்தையும் கைப்பற்றுவோம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடிய விரைவில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை, அதன் அதிகாரம் ஆகியவற்றை ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான சக்தியிடம் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி சார்பில் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டங்களுக்கு செல்லாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

சுதந்திரக்கட்சிக்குள் நாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை தடுக்க பல சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

நாங்கள் இந்த போராட்டத்தை சுதந்திரக்கட்சிக்குள் செய்யவில்லை என்றால், அதனை ஐக்கிய தேசியக்கட்சி விரும்பும். சுதந்திரக்கட்சியின் 23 பேர் அரசாங்கத்துடன் இருக்கின்றனர்.

அரசாங்கத்தில் இருக்கும் 23 பேரில் 10 பேராவது எம்முடன் எதிர்க்கட்சிக்கு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.

சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியினர் முக்கியமானவர்கள் என்பதாலேயே அரசாங்கத்தில் இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியினரும் ஏனையோரும் எம்மை பற்றி பேசி வருகின்றனர்.

நாங்கள் முக்கியமில்லை என்றால், எம்மை பற்றி பேசாமல் இருக்கலாம். தேவையில்லை என்றால் ஏன் நாங்கள் அவர்களின் நினைவுக்கு வருகின்றோம்.

அரசியலில் முக்கியமில்லாத கட்சிகள் எமக்கு நினைவுக்கு வருவதில்லை. எனினும் 16 பேர் பற்றி அரசாங்கத்தில் இருக்கும் 23 பேருக்கும் நினைவுக்கு வருகிறது.

அரசாங்கத்தில் இருக்கும் மனோ கணேசனும் எமை பற்றி பேசுகிறார். எமக்கு எதிர்காலம் இல்லை என்கிறார்.

எனினும், இரவு கனவிலும் பிரயோசனமில்லாத 16 பேர் மட்டுமே இவர்களுக்கு தெரிகின்றனர் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.