அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

எதிர்வரும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதியுச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைத்து ஒரே அணியில் போட்டியிட வைப்பதற்கான முயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே பேசி அக்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்துள்ளோம் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுத் தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல கட்சிகள் பொதுச்சின்னத்தின் கீழ் இணைந்து போட்டியிடச் சம்மதித்துள்ளன. சில கட்சிகள் பொதுச்சின்னத்தின் கீழ் இணையாவிட்டாலும் இம்முயற்சியை வரவேற்று ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

ஒரிரு கட்சிகள் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் வேண்டுகோளைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளன.

இந்த நிலையில் இம்முயற்சியின் அடுத்த கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து பேச கிழக்குத் தமிழர் ஒன்றியம் உத்தேசித்துள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான அழைப்புக்கடிதங்கள் சில தினங்களில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.