பொலிஸ் மா அதிபர் மீது குற்றம்சாட்டிய மஹிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கு சம்பளங்களை அதிகரிப்பதில் பிரயோசனம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களை சுயாதீனமாக இயங்கவிடாது அவர்களின் சம்பளங்களை அதிகரிப்பதில் அர்த்தம் இல்லை என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், பொலிஸ் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் பொலிஸ் மா அதிபரால் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

எனினும் இதனை மறுத்த சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, அவ்வாறான சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டுமாறு மஹிந்தவிடம் கோரினார்.

இதன்போது பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தனவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று மஹிந்த சுட்டிக்காட்டினார்.

எனினும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளமையே அதற்கான காரணம் என்று மத்துமபண்டார பதில் வழங்கினார்.

எனினும் இதனை ஏற்க மறுத்த மஹிந்த ராஜபக்ச, பதவியுயர்வு வழங்கப்பட்டதன் பின்னர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது நியாயமற்ற செயல் என்று கூறினார்.

அவ்வாறெனின் குற்றச்சாட்டு பதவியுயர்வு வழங்கப்படுவதற்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கவேண்டும் என்று மஹிந்த சுட்டிக்காட்டினார்.

சுயாதீன ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பொலிஸ் மா அதிபர் மாற்றமுடியுமாக இருந்தால், சுயாதீன ஆணைக்குழுவின் பயன் என்ன என்று மஹிந்த வினவினார்.