வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ள சுதந்திரத்தை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் எதிர்காலத்தில் தமது உண்மையான உரிமைகளுக்காக போராடினாலும் அவற்றை எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியது. விமர்சிக்கும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை வழங்கியது. கடந்த காலத்தை போல் அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிடவும் விமர்சனங்களை முன்வைக்கவும் நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கினோம்.

இதனை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். ஊடகங்கள், தொழிற்சங்கங்கள், சமூக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் இந்த சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

எனினும் இந்த தரப்பினர், வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்தவில்லை என்பதை காணமுடிகிறது. நாட்டின் எதிர்கால பொது போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை செய்ய வேண்டிய இடம் தொடருந்து சேவை.

தொடருந்து சேவை நவீனமயமாவதை போல், அதில் பணியாற்றும் ஊழியர்களும் நவீனமயமாக வேண்டும். சிறிய சம்பவங்களும், தமக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்காகவும் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க கூடாது.

தொடருந்து சேவையை நாளை காலையில், தனியார்மயப்படுத்த போகின்றனர் எனக் கூறி, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லை.

இயந்திர சாரதி மற்றும் உதவியாளர் இடையிலான சம்பள இடைவெளி குறைவு என்ற காரணத்திற்காக இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

சாதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையில் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களையும் சாதாரண மக்களையும் இவர்கள் பிணை கைதிகளாக்கியுள்ளனர் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.