நகர சபை உறுப்பினர்களை அழைக்காத கூட்டத்தை என்னால் நடத்த முடியாது : எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Report Print Mubarak in அரசியல்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்படாததால் கூட்டத்தை நடாத்த முடியாது எனக் கூறி காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளியேறியுள்ளார்.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமானது.

கூட்டம் ஆரம்பமான போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் எழும்பி இக் கூட்டத்திற்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட வில்லை.

இது கண்டிக்கத்தக்கது. ஏன் நகர சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட வில்லை என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதையடுத்து கூட்டத்தின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு அந்தந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படல் வேண்டும்.

இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் தெளிவாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தக் கூட்டங்களுக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படல் வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதை மீறி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வரக் கூடாது என்று அழைக்கப்படாமல் விடுவதற்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.

மீண்டும் நகர சபை உறுப்பினர்களை அழைத்து கூட்டத்தை நடத்துங்கள். அவர்கள் தான் மக்கள் பிரதி நிதிகள். மக்கள் பிரச்சினைகளை இந்தக் கூட்டத்தில் முன் வைத்து அதற்கு தீர்வு வழங்குவது இக் கூட்டத்திலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்து அது தொடர்பான தீர்மானத்தை எடுத்த பின்னர் கூட்டத்தை நடாத்துவோம்.

நகர சபை உறுப்பினர்களை அழைக்காத கூட்டத்தை நடத்த முடியாது என்று கூறி விட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.