மஹிந்த இருக்கும் போது எனக்கு இப்படி நடக்கவில்லை! சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது நடைபெறுவது போன்ற வேலைகளை அவர் செய்யவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

களனி போன்ற பிரதேசங்களில் கொழும்பு 7 பகுதியை சேர்ந்த டை கோர்ட் அணிந்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை. நான் காடுகளுக்கு யானைகளை பார்க்க செல்லும் போது, எனது ஆதரவாளர்கள் அவர்களின் செலவில் என்னை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அவ்வாறு என்னுடன் வரும் நான்கு பேருக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டனர். இரண்டு வருடங்களில் இவர்களுக்கு எதிராக போதைப் பொருள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.

மூன்று வாரங்களில் நான்கு பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளனர். வீட்டில் போதைப் பொருள் இருந்தது, கத்தி இருந்தது என்று குற்றம் சுமத்தி கைது செய்துள்ளனர்.

இவை அனைத்தும் அரசியல். இதற்கு எதிராக நான் போராடுவேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுல்படுத்தப்படுவதில்லை. மகிந்த ராஜபக்சவுடன் கொலை செய்யும் அளவுக்கு பகை இருந்த போதிலும் போதைப் பொருளை கொண்டு வந்து போட்டு, எமது ஆதரவாளர்களை கைது செய்யவில்லை.

தற்போது அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை நிறுத்தவில்லை என்றால், வெட்க கேடு எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.