அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் பந்துல வெளியிட்டுள்ள தகவல்! ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயார்

Report Print Kamel Kamel in அரசியல்

சிங்கப்பூர் உடன்படிக்கையின் பிரதான மூளையாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் செயற்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அர்ஜூன் மகேந்திரன் பங்கேற்றிருந்தார்.

யாரேனும் அதனை இல்லை எனக் கூறினால், சந்திப்பில் அர்ஜூன் மகேந்திரன் பங்கேற்ற புகைப்படங்களை என்னால் ஆதாரமாக நிரூபிக்க காண்பிக்க முடியும்.

அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதனால், சிங்கப்பூர் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகள் அவருக்கு உண்டு.

இதன் காரணமாகவே அவரை இலங்கைக்கு அழைத்து வந்து மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் அமர்த்தியது இந்த அரசாங்கம்.

சிங்கப்பூரில் இருந்து கொண்டே இலங்கையின் கைத்தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நிர்வாகம் செய்யும் அதிகாரம் இந்த உடன்படிக்கையின் மூலம் அர்ஜூன் மகேந்திரனுக்கு கிடைக்கும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளின் பின்னர் அர்ஜூன் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

அதன் பின்னர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்றிருந்தார்.

சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இலங்கை அந்நாட்டின் குப்பை மேடாக மாறும் எனவும், தற்போது சட்டவிரோதமான முறையில் இந்த உடன்படிக்கை அமுல்படுத்தப்படுகின்றது எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.