சந்திரிக்காவின் தலைமையிலான காரியாலயத்தினால் தயாரிக்கப்பட்ட நாடகத்திற்கு தடை

Report Print Kamel Kamel in அரசியல்

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான வானொலி நாடகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான தேசிய நல்லிணக்க காரியாலயத்தினால் இந்த நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த நாடகத்தில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த நாடகத்தை ஒலிபரப்புச் செய்வதனை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்திக் கொண்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் ஊடகங்களில் வெளியிட்ட கருத்து குறித்து கவனம் செலுத்தி வானொலி நாடகத்தை இடைநிறுத்திய உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க காரியாலயத்தினால் பௌத்த மதத்தை விகாரப்படுத்தி இழிவுபடுத்தும் வகையிலான நாடகத் தொடர் ஒன்றை தயாரித்து வருவதாகவும், இதற்கு “கண்ணத்தில் அறை” என பெயரிடப்பட்டிருந்ததாகவும் ஒமல்பே சோபித தேரர் அண்மையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்தை தொடர்ந்து அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய வானொலி நாடகம் ஒலிபரப்புச் செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.