புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமைக்கு யாழ். மாநகர சபையில் கண்டனம்

Report Print Sumi in அரசியல்

தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமைக்கு யாழ். மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் அமர்வு இன்று காலை 10 மணிக்கு மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகரசபை ஊடாக நியமிக்கப்பட்ட 3 ஊழியர்களுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்படாத விடயம் தொடர்பாக மாநகர சபையின் உறுப்பினர் பார்த்தீபன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

அதன் பிரகாரம், வேறு ஊழியர்களின் உதவியுடன் வேலி அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளன.

ஆனால், இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், சம்பவ இடத்திற்குச் சென்ற மாநகர உறுப்பினர் பார்த்தீபன்,

“ஏனைய உறுப்பினர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என்றும், அவ்வாறு அறிவித்திருந்தால், அந்த இடத்திற்கு வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க முடியும் ஏன் அழைக்கவில்லை?” என்றும் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

உறுப்பினர்களின் மத்தியில் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்பில் கடும் விவாதம் இடம்பெற்றது.

இந்த நினைவுத் தூபிக்கான பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் குறித்தொதுக்கப்பட்ட 2 இலட்சம் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.