சரத்பொன்சேகா இராணுவ ரீதியாகவே சிந்திப்பார்! முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலடி

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

“தமிழ் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் எப்போதும் இருக்கவேண்டும் என எங்கும் எழுதப்படவில்லை.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடக்கும் நிலையில் இராணுவம் தமிழர் நிலங்களில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்பட வேண்டும்.”

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாணத்தில் மக்களுடைய நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறுவது மடமைத்தனம் என முன்னாள் இராணுவ தளபதியும், அமைச்சருமான பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய முதலமைச்சர்,

“சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தவர். அவர் இராணுவ ரீதியாகவே சிந்திப்பார். ஆனால் எக்காலத்திலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே தமிழர்கள் இருக்கவேண்டும் என எங்கும் எழுதிக்கொடுக்கப்படவில்லை.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகவே இராணுவம் எங்களுடைய மக்களின் நிலங்களில் இருந்து படிப்படியாக வெளியேறவேண்டும்.

இனியும் நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவேண்டும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.

காரணம் இந்த நாட்டில் உள்ள மற்றய இனங்களைபோல் நாங்களும் சம அந்தஸ்த்து கொண்டவர்கள் என்பதன் அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்றக்கொள்ள மாட்டோம்.

இராணுவம் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்வதாக சமகால இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஆம் அந்த நன்மைகள் எங்களுடைய மக்களை தங்கள் வசப்படுத்துவதற்கான முயற்சி மட்டுமே.

எங்களுடைய உரிமைகளை எங்களிடம் கொடுத்த பின்னர் இராணுவம் இங்கே எதாவது செய்தால் அதனை ஓரளவுக்கு சகித்துக் கொள்ளலாம். காரணம் நாங்கள் எமக்கு தேவையானதை செய்யுமாறு கேட்கலாம்.

ஆனால் மத்திய அரசாங்கம் எங்கள் உரிமைகளை பறித்து வைத்துக் கொண்டு தங்களுடைய பிரதிநிதிகளாக இராணுவத்தை இங்கே வைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பெருமிதப்பட்டு பேசுவதும், இராணுவம் இங்கே இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என கூறுவதும் இராணுவ ஆக்கிரமிப்பு எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமேயாகும்” எனவும் கூறியுள்ளார்.