மன்னார் நகர சபையில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களை வைப்பது தொடர்பில் சலசலப்பு

Report Print Ashik in அரசியல்
81Shares

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மன்னார் நகர சபை உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட நிலையில், சபை அமர்வில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

மன்னார் நகர சபையின் 6வது அமர்வு இன்று காலை 10.30 மணியளவில், நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் பிரேரணைகளை முன்வைத்த பின் உரையாற்றினார். இதன் போதே சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,

அனைத்து உள்ளூராட்சி மன்ற மண்டபங்களிலும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே மன்னார் நகர சபையின் சபா மண்டபத்திலும் அவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். முன்னாள் நகர பிதாவின் புகைப்படம் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு நாங்கள் எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஒரு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், வடக்கு முதலமைச்சர் ஆகியோரது புகைப்படங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

யாராக இருந்தாலும் அவர்களுக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் தெரிவித்தார். இதற்கு பதில் வழங்கிய நகர முதல்வர்,

உள்ளூராட்சி அமைச்சு வடமாகாண சபைக்கள் இருக்கின்றது.

எனவே முதலாவதாக முதலமைச்சரின் புகைப்படமே காட்சிப்படுத்தப்பட வேண்டும். எனினும் அதற்கு எமக்கு உடன்பாடில்லை. முதலாவது நகர பிதா என்ற வகையில் அவருடைய புகைப்படம் இங்கே வைக்க வேண்டிய கடமை உள்ளது.

தொடர்ந்து வருகின்ற நகர முதல்வர்களுடைய புகைப்படங்களும் இங்கே வைக்கப்படும். இது சபைக்காண மரபு. எனவே நகர சபையின் தலைவர் என்ற வகையில் இங்கே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

முதலில் வடமாகாண முதலமைச்சரை முன்னுரிமைப்படுத்தவில்லை. ஆனால் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை இங்கே காட்சிப்படுத்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போதைக்கு எவறுடைய புகைப்படங்களையும் இங்கே வைப்பதற்கு அனுமதி இல்லை. சபையின் தலைவர் என்ற வகையில் இதனை எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

இதன் போது சபையின் உறுப்பினர்கள் சிலர் புகைப்படங்கள் காட்சிப்படுத்துவதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன் போது அங்கு உரையாற்றிய நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் ,

அரச திணைக்களங்களில் முக்கியமாக வைக்கப்பட வேண்டிய ஜனாதிபதியின் புகைப்படங்கள் எங்கையோ ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே காட்டாயம் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

நாம் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். இங்கே காட்சிப்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் மக்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. இங்குள்ள 16 உறுப்பினர்கள் மாத்திரமே இங்குள்ள புகைப்படங்களை பார்க்கப்போகின்றோம்.

வேறு யாரும் பார்க்கப்போவதில்லை. எனவே புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் சபையில் பிரச்சினைகளை கொண்டு வராமல் எமது வேலையை நாங்கள் சரியாக செய்வோம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என அவர் தெரிவித்தார்.

இதன் போது சபையில் சிறிது சல சலப்பு இடம் பெற்றதோடு, சபையில் தொடர்ந்து பல்வேறு விடையங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. உறுப்பினர்களின் பிரேரணைகளும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.