புலிகளின் ஆயுத விவகாரம்: இம்ரான் எம்.பியின் அதிரடி நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in அரசியல்

புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் தலைவர்களிடம் இருப்பின் முதலில் கிண்ணியாவில் அமைந்துள்ள எனது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் உள்ளதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களின் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் கல்வியமைச்சில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் காலத்தில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்கள் ஆயுதங்கள் தூக்கியது கிடையாது.

யுத்தம் நிறைவடைந்த பின் கிரிஸ் பூதம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்கள் யாரும் ஆயுதம் தூக்கவில்லை.

இவர்கள் கூறுவது போன்று முஸ்லிம்களுக்கு ஆயுதம் விற்பனை செய்திருந்தால் இந்த பிரச்சினைகளின் போது முஸ்லிம்கள் ஆயுதங்களை வெளியில் எடுத்திருக்க வேண்டும்.

ஆகவே இவர்கள் கூறுவதை போல் எமது பிரதேசங்களில் சட்டவிரோத ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு படையினர் வந்து சோதனை செய்து பார்க்கலாம். அந்த சோதனையை முதலில் எனது வீடு, அலுவலகத்திலிருந்தே ஆரம்பிக்கவும்.

ஆயுதங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இவர்களிடம் உள்ளன என கூறியிருந்தனர். ஆகவே பாதுகாப்பு படையினர் முதலில் இவர்களிடமிருந்தே விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன் ஆயுதம் தொடர்பான தகவல்கள் இவர்களிடம் இருப்பின் ஏன் அதை பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்காமல் ஊடகங்களின் முன் கூற வேண்டும்? எனவே இவர்களிடம் தனிப்பட்ட அரசியல் நிகழச்சி நிரல் ஒன்று உள்ளது இதன்மூலம் தெளிவாகிவருகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாடறுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக தமிழ் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் போன்ற தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நோக்கில் ஒரு சில குழுக்களால் திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்வாகவே நான் இதை கருதுகிறேன்.

எனவே அரசு இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இவர்களின் கருத்து பொய் என நிரூபிக்கப்பட்டால் அரசாங்கம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.