சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிப்போம்

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மாகாணத்தில் எந்தப் பகுதியிலும் சட்டவிரோத மீன்பிடி முறைக்கு ஆதரவளிக்க முடியாது. அதற்கு எதிராக போராடும் மீனவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் இரவுவேளை கடலட்டை பிடித்த மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத மீன்பிடி முறையை அனுமதிக்க முடியாது. பகலில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கிவிட்டு, திடீரென இரகசியமாக இரவில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதித்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மீனவர்களின் வாடிகள் எரியூட்டப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது கவனம் செலுத்துவார் என்று அமைச்சர் மனோ கணேசன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.