யுத்த நினைவுச் சின்னங்களை அகற்ற கூறியது உண்மையே: சீ.வி.விக்னேஸ்வரன்

Report Print Sumi in அரசியல்
186Shares

யுத்த நினைவுச் சின்னங்களை பார்க்கும் போது, மக்களின் மனநிலைகள் பாதிக்கப்படுவதனால், நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது உண்மையே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கடந்த 14ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கேட்ட போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கோரியது உண்மையே. நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றன.

நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் இடையூறு விளைவிக்கும் என்ற காரணத்தினால், நினைவுச் சின்னங்களை அகற்றினால் கூடிய சமாதான சூழலை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன என ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

ஜனாதிபதி என்ன விதமான கருத்தினைக்கொண்டுள்ளார் என்பது பற்றித் தெரியாது. ஆனால், இந்த விடயங்களைச் சொல்ல வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது.

இந்த நினைவுச் சின்னத்தினைப் பார்க்கும் போது, மக்கள் கோபமடைகின்றார்கள். பழைய நினைவுகளினால் துன்பப்படுகின்றார்கள். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஆனால், ஜனாதிபதியிடம் இருந்து இதுவரையில் எந்தப்பதிலும் கிடைக்கவில்லை என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.