புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! சிங்கள ராவய அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இரண்டு அமைச்சர்களிடம் உள்ளதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் வெளியிட்ட தகவல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் நேற்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

புலிகளின் வசமிருந்து பின்னர் காணாமல் போன சுமார் ஐயாயிரம் ஆயுதங்கள் இரண்டு அமைச்சர்களிடம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு தொகை ஆயுதங்கள் இரண்டு அமைச்சர்களின் வசம் இருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கிழக்கில் கோயில்களை அழித்து அந்த இடங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த இரண்டு அமைச்சர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், நாட்டினதும் நாட்டுப் பிரஜைகளினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு விரைவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் சுதந்த தேரர் கோரியுள்ளார்.

போரின் போது தாம் பயன்படுத்திய 5000 ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகவும் இவை இரண்டு அமைச்சர்கள் வசம் உள்ளதாகவும் கடந்த 18ம் திகதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் புலிப் போராளிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.