விஜயகலா அரசியலமைப்பு சட்டத்தை மீறினாரா? மீண்டும் விளக்கம் கோரும் சபாநாயகர்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப் புலிகள் தொடர்பில் கூறிய கருத்து மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என தெளிவாக அறிவிக்குமாறு சட்ட மா அதிபரிடம் மீண்டும் கோருவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

விஜயகலா மகேஷ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டு கடிதம் நேற்று சபாநாயகருக்கு கிடைத்ததாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது.

விஜயகலா மகேஷ்வரனின் கருத்து தொடர்பில் நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் செயற்படுமாறு சட்டமா அதிபர், சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக செயற்பட நிலையியல் கட்டளை சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை எனில், நிலையியல் கட்டளை சட்டத்தை திருத்துமாறும் அல்லது நாடாளுமன்றத்தின் இணக்கத்தின் அடிப்படையில் செயற்பாடுமாறும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை கூறி அனுப்பியுள்ள கடிதத்தில் விஜயகலா மகேஷ்வரன் அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளாரா என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும் மீண்டும் அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என விஜயகலா மகேஷ்வரன் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், விஜயகலா அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்பின்னர், விஜயகலாவின் கருத்தின் மூலம் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை அறிய தருமாறு சபாநாயகர், சட்டமா அதிபரிடம் கோரியிருந்தார்.

இந்த சம்பவத்தின் பின்னர், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபரிடம் அது சம்பந்தமாக அறிக்கையொன்றையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.