சிங்களத்தில் முதலில் எழுத வேண்டும் என்று சட்டமில்லை! அமைச்சர் மனோ கணேசன்

Report Print Steephen Steephen in அரசியல்

பெயர் பலகைகளில் முதலில் சிங்களத்தில் எழுத வேண்டும் என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கில், பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், இரண்டாது ஆங்கிலத்திலும் மூன்றாவது சிங்களத்திலும் எழுதப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“எமது நாட்டில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசகரும மொழிகள் என்பதுடன் தேசிய மொழிகள். வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மாகாணங்களில் பெயர் பலகைகளை எழுதும் போது முதலில் தமிழிலும், இரண்டாவதாக சிங்களத்திலும் எழுதுவதில் தவறில்லை.

சிங்களத்தில் தான் முதலில் எழுத வேண்டும் என்ற சட்டம் இல்லை. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் முதலில் சிங்களத்தில் எழுதலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் பெயர்களை மொழி பெயர்ப்பு செய்யாது, தமிழில் இருப்பது போலவே எழுத வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இதனடிப்படையில் வடக்கில் நாகதீப இல்லை எனவும் நயினாதீவு மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், “சிங்களத்தில் நயினாதீவு என்று எழுத முடியாது. தமிழில் நாகதீப என்றும் எழுத முடியாது. மொழி உச்சரிப்புகளுக்கு ஏற்ப அது மாறுபடலாம்” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே வட மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தமை சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அரசகரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதேசத்தில் பெரும்பான்மையாக மக்கள் பேசும் மொழிக்கு அமைய பெயர் பலகைகளை உருவாக்குவது சாதாரணமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.