ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவதை தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்!

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் என கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தேவாலபொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதை தடுக்க எந்த காட்டிக்கொடுப்பையும் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை காட்டிக்கொடுத்தேனும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதே ரணில் - மைத்திரி கூட்டணியின் ஒரே கனவு.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வர முடியும் என்ற நிலைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த விதத்திலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற தேவையே அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

இதற்கு அமையவே 19வது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அது நாட்டையும் மக்களையும் நேசிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம் அல்ல.

மகிந்த ராஜபக்ச பதவிக்கு வருவதை தடுக்கவே ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மாத்திரமே வகிக்க முடியும் என்ற திருத்தத்தை கொண்டு வந்தனர்.

கோத்தபாயவும் பசில் ராஜபக்சவும் போட்டியிடுவதை தடுக்கவே இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்தனர்.

நாமல் ராஜபக்சவுக்கு வேலி போடவே 35 வயதுக்கும் குறைந்த ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்தனர்.

இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்தே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளது.

ஒரு குடும்பத்தை இலக்கு வைத்து அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த ஒரே நாடு இலங்கையாகவே இருக்கும் என நான் கருதுகிறேன் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.